எல் நீனோ காலநிலை மாற்றம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக எதிர்வரும் 22 ஆகஸ்ட் முதல் நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்வதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் தீர்மானித்துள்ளதால் மாவட்டத்தில் ஏற்படவுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை எதிர் கொள்ள உள்ளூராட்சி சபைகள் தயாராக வேண்டும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊடாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் நீர்வழங்கலை மேற்கொள்வது சாத்தியமற்றது என பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இன் நிலையில் எதிர்வரும் 22ம் திகதி ஆகஸ்ட் மாதம் முதல் நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய உத்தேச நீர்வெட்டு நேரமாக முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை நான்கு மணித்தியாலங்கள் நீர் வெட்டை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளதுடன்,
இந்நிலமை வழமைக்கு திரும்பும் வரை, நீர்ப்பாவனையாளர்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே மட்டக்களப்பு வாழ் மக்கள் தற்போது இலங்கையில் ஏற்பட்டு வரும் எல்நீனோ காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வரட்சி நிலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இது குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீர்வழங்கல் வடிவமைப்பு சபை ஊடாக வழங்கப்படும் நீர் வழங்கல் தடைப்படுமாக இருந்தால் செங்கலடி, வாழைச்சேனை, ஏறாவூர், மயிலம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பு நகரம், காத்தான்குடியில் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள மக்களும் தங்களது நாளாந்த நீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் மிக மோசமான பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். அதே போல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரின் ஊடாக நீரை பெற்று வரும் வர்த்தக நிலையங்கள், சிறு கைத்தொழில்சாலைகள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நீரை சிக்கனமாக பயன்படுத்துவதோடு, குடி நீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும்.
மற்றும் குடிநீர் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு நீரை பெற்றுக் கொள்ள கிணறுகள், குழாய் கிணறுகள் போன்ற வேறு வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகள் ஊடாக ஏற்கனவே வரட்சியால் பாதிக்கப்படும் படுவான்கரை பகுதி மக்களின் நாளாந்த நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் குறித்த நீர் அப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை.
இதேவேளை வருடா வருடம் வரட்சி நிவாரண நிதியாக குடி நீரை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை அரசாங்கம் நிறுத்தி உள்ளது. இன் நிலையில் மாவட்டத்தில் ஏற்படவுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி எழுகிறது.
இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
மாவட்டத்தில் ஏற்பட உள்ள வரட்சி நிலையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த பாதுகாப்பு நடைமுறைகள், சுகாதார ரீதியான நீர் பயன்பாட்டு முறைகள் குறித்து அரசாங்கம் அரச திணைக்களங்கள் உள்ளூராட்சி சபைகள் ஊடாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரட்சி பாதிப்பில் இருந்து பொது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.





