மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மேம்பாடு மற்றும் அங்குள்ள அவசியத் தேவைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று (24) திகதி இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு நிர்வாகிகளுடன் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், பிரதி பணிப்பாளர் டொக்டர் தாஹிரா சபியுதீன், உயர்மட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் மருத்துவச் சேவைகளை மேலும் வினைத்திறனுடையதாக மாற்றும் நோக்கில், வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய குறைபாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. மேலும், வைத்தியசாலைக்கு அவசரமாகத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்வதாக உறுதியளிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 432 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இருதயவியல் சிகிச்சைப் பிரிவின் கட்டுமானப் பணிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டார். குறித்த பிரிவின் பணிகளை விரைவாக நிறைவு செய்து, பொதுமக்களுக்கு மேம்பட்ட இருதய சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் மிக முக்கியமான மருத்துவ நிலையமாக விளங்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைகளை மேலும் தரம் உயர்த்துவது மற்றும் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.





