வனத்துறையினரின் நெருக்கடிகளுக்குத் தீர்வு: வாகரையில் பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தலைமையில் குறைகேள் சந்திப்பு

 



கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாகரை, பால்சேனை மற்றும் நாகபுரம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பிலான மக்கள் குறைகேள் சந்திப்பொன்று 2026 ஆகஸ்ட் 23 அன்று இடம்பெற்றது. கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.சுவேந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள், பொதுமக்களின் குறைபாடுகளை நேரடியாகக் கேட்டறிந்தார்.

சந்திப்பின் போது நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள், தேன் சேகரிப்பாளர்கள் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் தமக்குத் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வரும் நெருக்கடிகளால், அன்றாட வாழ்வாதாரத் தொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அடுத்து நடைபெறவுள்ள பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களுக்கு முன்னதாக இப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் ஆவணங்களை எழுத்துமூலக் கோரிக்கைகளாகத் தம்மிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக உடனடியாகத் தொடர்புகொண்டு பேசியதுடன், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வுகளைப் பெற்றுத்தரத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார். 

 இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான திரு.த.பிரபாகரன், திரு.கா.நாகேந்திரன், தமிழ் அரசுக் கட்சியின் கிளை உப தலைவர் திரு.ஜெபஸ்ரன், சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள், மீனவர்கள், தேன் சேகரிப்பாளர்கள் மற்றும் கிராமக் கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.