பொலிஸ் தலைமையகத்தினால் பயன்படுத்தப்படும் தரவுத்தளக் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு காரணமாக, பொலிஸ் சான்றிதழ்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள 'சுஹுருபாய' கட்டிடத்தின் 17வது மாடியில் உள்ள சான்றளிப்புப் பிரிவின் ஊடாகவே இச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களைச் செயலாக்குதல், அறிக்கை சரிபார்ப்பு மற்றும் சான்றிதழ் அச்சிடுதல் போன்ற அனைத்துப் பணிகளும் கணினிமயமாக்கப்பட்ட தரவுத்தள அமைப்பின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று வியாழக்கிழமை (20) பிற்பகல் 12.50 மணி முதல் இக் கணினி முறைமையின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
இப் பிரச்சினை குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளடன், கணினி அமைப்பை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, தரவுத்தள அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை பொலிஸ் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கணினி அமைப்பு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததும் பொதுமக்கள் வழமை போல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிகமாகத் தெரிவித்துள்ளது.





