நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (SDIG) சஜீவ மேடவத்த இதனை தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையை இன்று (02-08-2026) நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், வெலிக்கடை, மெகசின், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கிய சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று ஏற்பட்ட இந்தச் சம்பவம் காரணமாகச் சிறைச்சாலைக்குள் எழுந்த பதற்ற நிலை, இன்றுகாலைப் பொழுது வரை தொடர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கலவரத்தின் போது பெருமளவிலான கைதிகள் ஒன்றிணைந்து சிறைச்சாலையின் சொத்துக்களுக்குப் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சிறைச்சாலைத் திணைக்களம், இலங்கை காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப் படை (STF), இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய கூட்டுப் பாதுகாப்புப் படையினரின் தீவிர முயற்சியால் இன்றுகாலை நிலைமை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சஜீவ மேடவத்த தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மணிநேரங்களுக்குள் சிறைச்சாலையின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வளாகத்தின் அன்றாட இயல்பு நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப அதிகாரிகள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





