மத, கலாச்சார நிகழ்வுகளில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள்: விலங்குகளுக்குச் சங்கிலி போடுதல், சித்திரவதை செய்வதற்குத் தடை!

 


 
இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு, கருணை மற்றும் நலன்பேணலை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் வழிகாட்டலில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்தின் கீழ், மத அல்லது கலாச்சார நிகழ்வுகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்த முடிந்தபோதிலும், அவற்றின் கால்களில் சங்கிலி அல்லது வளையமிடுதல், கழுத்தை நெரித்தல், கம்பிகளால் கட்டுதல், அளவுக்கு அதிகமாக நடத்திச் செல்லுதல், பாரம் ஏற்றுதல் மற்றும் சித்திரவதை செய்தல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
​மேலும், விலங்குகளைக் கொடூரமாகக் கொல்வது, கர்ப்பிணி விலங்குகளைக் கொல்வது, பொறிவைத்துப்பிடிப்பது, 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விலங்குகளை விற்பனை செய்வது மற்றும் தகுதியற்றவர்கள் சிகிச்சை அளிப்பது போன்ற பல விடயங்கள் தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இச்சட்ட விதியை மீறுவோருக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விலங்குகளின் நலன்களைக் கண்காணிக்க 11 அதிகாரபூர்வ உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரின் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய விலங்கு நல ஆலோசனைக் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது