மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று புதன்கிழமை (19) பிற்பகல் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவி சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு, முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்ததுடன், கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 12.00 மணியளவில் விடுதி அறையில் மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தை நேரில் கண்ட இரு மாணவிகள் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்ததாகவும், பின்னர் சக மாணவர்களால் அவர்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





