சுவிட்ஸர்லாந்தின் லௌசேன் பொன்டெய்ஸ் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வண்டா டயமண்ட் லீக் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே முதலாம் இடத்தைப் பெற்று சரித்திரம் படைத்தார்.
இதன் மூலம் டயமண்ட் லீக் தொடர் ஈட்டி எறிதலில் மூன்றாவது வெற்றியை அவர் பதிவுசெய்தார்.
உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிட்ட அவர், ஈட்டி எறிதலில் 88.14 மீற்றர் தூரம் வீசி இந்த அரிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கை விளையாட்டுத் துறையை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளார்.
இப்போட்டியில் முன்னாள் உலக சம்பியனும், ஒலிம்பிக் சம்பியனுமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.05 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் மற்றொரு முன்னாள் உலக சம்பியனான அண்டர்சன் பீட்டர்ஸ் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான்களைப் பின்தள்ளி, இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பிடித்தமையானது சர்வதேச தடகள வட்டாரங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ருமேஷ் தரங்க பங்கேற்ற மூன்றாவது டயமண்ட் லீக் போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற ரோம் டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் வீசி முதலிடத்தைப் பெற்று அசத்தியிருந்த அவர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டோஹா டயமண்ட் லீக் போட்டியிலும் முதலிடத்தை வென்று ஆதிக்கம் செலுத்தியிருந்தார்.





