இடமாற்றப்பட்ட சுகாதார உதவியாளர்களுக்குபதிலாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்! அமைச்சர் நளிந்த வைத்தியசாலை குழுத் தலைவர் ராஜனிடம் உறுதி!!

 

 

 





 ( வி.ரி.சகாதேவராஜா)
     கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளாகி இடமாற்றப்பட்ட 09 முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்களுக்குப் பதிலாக, புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று, சுகாதார சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தன்னைச் சந்தித்த கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுத் தலைவர் சந்திரசேகரம் ராஜனிடம் தெரிவித்தார் . அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், மருத்துவர் இ.சிறிநாத் ஆகியோரின் ஏற்பாட்டில் நேற்று (19) புதன்கிழமை மாலை 5 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பில் மேற்படி உறுதிமொழியை அமைச்சர் வழங்கினார் . கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுத்தலைவர் ராஜன், தனது மகஜரை சமர்ப்பித்து தங்களுக்கு வெற்றிடமாக உள்ள சுகாதார உதவியாளர்கள் தேவை என்று கோரிக்கை விடுத்த பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . மேலும், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்த பொழுது அதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். வைத்தியசாலையில் புதிதாக கழிவு நீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ தொகுதி ஒன்றை அமைப்பதற்கும், எதிர்காலத்தில் புதிய சுகாதார பராமரிப்பாளர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குவதற்கான அனுமதியை வழங்குவதாகவும் அமைச்சர் நளிந்த உறுதியளித்தார். இந்த சந்திப்பின் பொழுது "குறித்த சீருடை விவகாரம் தொடர்பாக ஒன்பது பேர் தற்காலிகமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு, இடமாற்றப்பட்டமை தெரிந்ததே. இந்த இடமாற்றமானது அங்கு ஏற்பட்டுள்ள இனவாத போக்குகளால், அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் அந்தப் பகுதியில் சுகாதார சேவையை தடையின்றி வழங்க வேண்டும் என்பதற்காகவும் - இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக அமைச்சர் நளிந்த குறிப்பிட்டார். இதை வைத்து யாரும் இதை விரிசலை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்தார். இந்த இடமாற்றத்தை வழங்கி நெருக்கடியை தீர்த்து வைத்து , எமது கோரிக்கைகளையும் உள்வாங்கி செய்து தருவதாக உறுதி அளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு குழுவினர் நன்றி கூறினர். சந்திப்பின் பின்னர், அமைச்சர் திருமதி சாவித்திரி போல்ராஜ்ஜை ,பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எஸ்.குகதாசன், கவி.கோடீஸ்வரன், டா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.