கிராமிய விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேறும் தருணம் வெல்லாவெளி பிரதேசத்தில் நவீன நெல் உலர்த்தும் களங்கள் அமைப்பு.

 



இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தில் விவசாயத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அறுவடை காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல வருடப் போராட்டங்களுக்கும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில், விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்த நெல் உலர்த்தும் களம் அமைக்கும் பணி தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 7 முக்கிய பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை காலங்களில் நெல்லை உலர்த்துவதற்குத் தகுந்த இடவசதியின்றி விவசாயிகள் படும் சிரமங்களை முற்றிலுமாக நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் முகமாக, குறித்த இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கள ஆய்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் கலந்துகொண்டு கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டதுடன், விவசாயிகளின் தேவைகளையும் குறைகளையும் நேரடியாகக் கேட்டறிந்தார்கள்.
குறிப்பாக, பின்வரும் மூன்று முக்கிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டு வரும் களங்கள் இக்கள ஆய்வின் போது நேரடியாகப் பார்வையிட்டார் வம்மியடியூற்று, இளைஞர் விவசாய திட்டம் மற்றும் தும்பன்கேணி.
ஏனைய குறிப்பிட்ட பகுதிகளிலும் இத்திட்டம் ஊடாக மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து, பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
அறுவடை காலத்தில் காலநிலை மாற்றங்களாலும், முறையான உலர்த்தும் வசதிகள் இன்மையாலும் விவசாயிகள் தமது விளைச்சலில் பாரிய இழப்புக்களைச் சந்திப்பது வாடிக்கையாகும். இந்த நவீன நெல் உலர்த்தும் களங்கள் அமைப்பதன் மூலம் விவசாயிகள் தமது நெல்லைத் தரமாகப் பாதுகாத்து, உரிய விலைக்குச் சந்தைப்படுத்த வழிவகை பிறக்கும். இது அப்பகுதி விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த மாபெரும் பலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.