'கல்விப் பேரவை' நிறுவும் புதிய சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி!

 

 


 

 பொதுக் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள தொழில்வாண்மையாளர்களை தரப்படுத்துதல், பதிவுசெய்தல், உரிமம் வழங்குதல், தரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் அங்கீகாரம் அளித்தல் ஆகிய பணிகளுக்காகக் கல்விப் பேரவையொன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர் கல்வியலாளர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் உள்ளிட்ட தொழில்முறைப் பிரிவினர் அனைவரும் இந்த முன்மொழியப்பட்ட பேரவையின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன தலைமையிலான குழுவொன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டது.

அந்தக் குழு தனது அறிக்கையை 2025 ஒக்டோபர் 3ஆம் திகதி சமர்ப்பித்ததுடன், அந்த அறிக்கை நாடாளுமன்றத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் உள்ள கல்விப் பேரவையை நிறுவுவதற்கான உப குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட அறிக்கையொன்றும் உப குழுவிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனையைக் கருத்திற்கொண்டு, கல்விப் பேரவையை நிறுவுவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அரசியலமைப்பு மற்றும் ஏனைய சட்டங்களின் கீழ் ஏற்கனவே அதிகாரங்கள் வழக்கப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, முன்மொழியப்பட்ட பேரவையின் செயற்பாடுகள் தற்போதைய சட்டக் கட்டமைப்புடன் முரண்படாத வகையில் இந்த வரைவுச் செயல்முறை முன்னெடுக்கப்படவுள்ளது.