இலங்கையில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொளராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் வரக்கூடிய எல் நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ளவும் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதிசெய்யவும் பாதுகாப்பு அமைச்சு ஆகஸ்ட் 6 அன்று விசேட சுற்றுநிரூபத்தை வெளியிட்டதுடன், சட்டத் திருத்தங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் நபருக்கான தினசரி நீர் விநியோகம் 6 லீட்டரிலிருந்து 15 லீட்டராக உயர்த்தப்பட்டு, 324 நீர் தாங்கி ஊர்திகள் (Water Bowsers) மூலமாகவும், தேவைப்படின் இராணுவ பவுசர்கள் மூலமாகவும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போதைய வறட்சி நிவாரணம் மற்றும் எதிர்கால மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.





