யாழ்ப்பாணம்
- செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 565 என்புக்கூடுகள்
மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்ட
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட
கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
கடந்த திங்கட்கிழமை மட்டும் மேலும் 8 என்புக்கூடுகளும் ஒரு என்புத்
துண்டும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்படி,
இதுவரை மொத்தம் 565 மனித எலும்புக்கூடுகளும் 45 என்புத் துண்டுகளும்
கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென குறிப்பிட்டார்.
நடைபெற்றுவரும் தற்போதைய அகழ்வுப் பணிகளில் கண்டெடுக்கப்படும் அனைத்து சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அகழ்வுப்
பகுதியிலிருந்து வெளிவந்துள்ள படங்களில், உடைகள் ஏதுமின்றி மனிதர்கள்
மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள்
காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன்,
உடல்கள் புதைக்கப்பட்டுள்ள மேலும் பல இடங்களை அடையாளம் காட்ட முடியும்
எனக் கூறியுள்ள, தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் சோமரத்ன
ராஜபக்ஷவிடம் இருந்து ஏன் இதுவரை தகவல்கள் பெறப்படவில்லை என்றும்
கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப்
பதிலளித்த அமைச்சர், செம்மணி விவகாரத்தில் உண்மைகள் முழுமையாக வெளிவர
வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும், நீதிமன்றக்
கட்டளைகளுக்கு அமைவாகச் சாட்சிகள் அழைக்கப்பட்டு விசாரணைகள்
விரைவுபடுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.





