கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்


 

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டுக்கான வாழ்வாதார சமுர்த்தி மற்றும் சமூக மேம்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், வறுமைக்குட்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (17) சமுர்த்தி மகாசங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, மேம்படுத்தல் மாதத்தை முன்னிட்டு, அசுவெசும பயனாளிகளை வாழ்வாதார ரீதியாக மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி பிரிவினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு தலா ரூ.150,000 அரச மானியத்தின் மூலம் வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதனுடன், பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், கோறளைப்பற்று மத்திக்கான க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்ட இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். சமீம்,
கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம். சரீப், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரவிச்சந்திரன், பிரஜா சக்தி தலைவர்களான பீ. பவூர்தீன் மற்றும் அஹமட் இர்ஷாத், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எஸ்.ஐ. பாறூக், சமுர்த்தி கட்டுப்பாட்டு சபை தலைவர் எம்.பைறூஸ், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டங்களின் மூலம் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, அவர்களை நிலையான வருமானம் பெறக்கூடிய குடும்பங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.