தென்னை விவசாயிகளுக்கு 22.7 மில்லியன் ரூபாய் மானியக் காசோலைகள் வழங்கி வைப்பு

 





வட தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு தென்னை விவசாயிகளுக்கு ரூ. 22.7 மில்லியன் மானியக் காசோலைகளும் 3,000 தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தென்னை ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வருடாந்த தென்னை உற்பத்தியை 4,200 மில்லியன் தேங்காய்களாகவும் உயர்த்தும் தேசிய இலக்கை அடைவதற்காக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் தென்னை பயிர்ச்செய்கை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் "கற்பகத்தரு வளம்" திட்டத்தின் கீழ், "வட தென்னை முக்கோண" திட்டத்தின் மற்றொரு முக்கிய கட்டமாக ரூ. 22.7 மில்லியன் மானியக் காசோலைகள் வழங்குதலும், 3,000 தென்னங் கன்றுகள் விநியோகித்தலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்றது. பருத்தித்துறை, சிலாபத்துறை மற்றும் கொக்கிலாய் ஆகிய பகுதிகளை இணைத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும், இத்தேசிய திட்டம் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. வட மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கையை விரிவாக்குதல், பயன்படுத்தப்படாத நிலங்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல் மற்றும் தேசிய ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குதல் ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும். இதன்போது, வட தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ் தென்னை காணிகளுக்கான நீர்ப்பாசன அமைப்புகளை அமைப்பதற்காக 443 தென்னை விவசாயிகளுக்கு மானியக் காசோலைகள் வழங்கப்பட்டதுடன், சிறப்புத் தென்னை காணி மறுசீரமைப்பு மானியத் திட்டத்தின் கீழ் மேலும் 72 தென்னை விவசாயிகளுக்கு மானியக் காசோலைகள் வழங்கப்பட்டன. இதன்படி, 515 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ. 22.7 மில்லியன் மானியம் வழங்கி வைக்கப்பட்டது. மேலும், வட மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சுமார் 3,000 தென்னங் கன்றுகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. "கற்பகத்தரு வளம்" திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "வட தென்னை முக்கோணம்" திட்டமானது, இலங்கையின் வட மாகாணத்தை ஒரு புதிய தென்னை உற்பத்தி வலயமாக்குதல், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல், தென்னை சார்ந்த தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிசெய்தல் மற்றும் தேசிய ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது