2026.08.23 ஞாயிறன்று இகிமிசன் மட்டக்களப்பு கல்லடி மணிமண்டபத்தில் மூன்று நூல்கள் வெளியீடு.

 




(வி.ரி. சகாதேவராஜா)

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், சமூக, கல்வி, ஆன்மிகம் மற்றும் கலாசாரத் துறைகளில் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.

இளைஞர்களுக்கான ஆளுமை விருத்தி முகாம்கள், உழவர் பயிற்சி முகாம்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்கள், கிராமப்புற மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகள், நூல் வெளியீடுகள், கிராமப்புற ஆன்மிக எழுச்சி நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் என பல்வேறு பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2026 ஆகஸ்ட் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மூன்று முக்கியமான நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

1. “நற்றமிழ் ஞாயிறு சுவாமி விபுலானந்தர்”

சைவப் புலவர் திரு. மு. சேமகரன் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல், சுவாமி விபுலானந்தரின் கவிதைகளை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சியாகும்.

சுவாமி விபுலானந்தரின் கவிதைகளின் ஆழம், அவற்றின் கட்டமைப்பு, கவித்துவச் சிறப்பு, தமிழ் செய்யுள் இலக்கணம் மற்றும் இலக்கிய மரபுகளுடன் அவற்றிற்குள்ள தொடர்பு ஆகியவற்றை ஆராய்ந்து, எளிமையான மொழிநடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

சுவாமி விபுலானந்தரின் கவிதை உலகை தமிழ் மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான ஆவணமாக இந்நூல் அமைகின்றது.

2. “பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பேரானந்தத் திருவமுது”

கலாபூஷணம் திரு. சதாசிவம் சரவணபவன் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்வையும் சாதனைகளையும் ஆழமாக எடுத்துரைக்கின்றது.

சனாதன தர்மத்தின் பல்வேறு ஆன்மிகப் பாதைகளையும் தனது சொந்த ஆன்மிக வாழ்க்கையில் சாதனை செய்து, அவை அனைத்தும் ஒரே பரம்பொருளை நோக்கிச் செல்கின்றன என்பதை வாழ்வின் மூலம் நிரூபித்தவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

அவரது ஆன்மிக சாதனைகள், அவற்றின் தன்மைகள், அவற்றால் கிடைக்கும் ஆன்மிகப் பயன்கள் மற்றும் அவற்றிலிருந்து இன்றைய மனிதர்கள் பெறக்கூடிய வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை ஆதாரபூர்வமாகவும் தெளிவாகவும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.

3. “சிவ சிந்தனைகள்”

ஸ்ரீமத் சுவாமி அஜராத்மானந்தஜி மகாராஜ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல், 1976ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளிவந்த சிந்தனைகளின் தொகுப்பாகும்.

சைவ சிந்தனை, ஆன்மிகம், தத்துவம் மற்றும் சமயத்தின் பல்வேறு நுணுக்கங்களை எளிமையானதும் அழகானதுமான முறையில் விளக்கும் இந்நூல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

பல ஆண்டுகளாக இதழ்களில் வெளிவந்த சிந்தனைகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, தமிழ் வாசகர்களின் பயனுக்காக நூல் வடிவில் வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறப்பு அதிதிகள்

இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களும், இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு. அனிருத்தனன் அவர்களும் கலந்துகொள்கின்றனர்.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் F. பாரதி கென்னடி, பணிப்பாளர், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்; திரு. பி. பாலஸ்ரீதரன், இணைப்புச் செயலாளர், புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார பிரதியமைச்சு; கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி நிர்மலேஸ்வரி பிரசாந்த் மற்றும் கலாநிதி த. விவேகானந்தராஜா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை – மட்டக்களப்பு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் – காரைதீவு, தமிழ் சங்கம் – மட்டக்களப்பு, வணிகர் சங்கம் – மட்டக்களப்பு மற்றும் கண்ணகி கலை இலக்கியக் கூடல் – மட்டக்களப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

ஆன்மிக ஆசீர்வாதம்

இந்நிகழ்வில் ஆன்மிக அதிதியாக, இலங்கை ராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ் அவர்கள் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கின்றார்.

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ் அவர்களின் தலைமையில் இந்நூல் வெளியீட்டு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறும் இந்நூல் வெளியீடு, ஆன்மிகம், தமிழ் இலக்கியம், சைவ சிந்தனை மற்றும் சுவாமி விபுலானந்தரின் பணிகள் குறித்த ஆழமான புரிதலை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும்.

இந்த மூன்று அரிய நூல்களும் ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்து, ஆன்மிக விழிப்புணர்வையும் இலக்கிய ஆர்வத்தையும் வளர்த்து, சுவாமி விபுலானந்தர் உள்ளிட்ட மகான்களின் அரும்பெரும் பணிகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.