பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவரை வழக்கின்றி தடுத்து வைத்திருப்பது, அவரை விடுவிப்பதற்கான ஒரு "விதிவிலக்கான சூழ்நிலை" (exceptional circumstance) என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் (என்றழைக்கப்படும் தனுஷ்) என்பவருக்கேபிணை வழங்க மறுத்து கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ரத்து செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் போது 26 வயது மட்டுமே ஆகியிருந்தது என்றும், அவர் தனது இளமைக் காலத்தின் மிக முக்கியமான பகுதியினை வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருந்தே சிறையில் கழித்துள்ளார் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த நபர் மீது, 2012 செப்டம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் (PTA கீழ் 115, அவசரகாலச் சட்டத்தின் கீழ் 115) உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 106 அரசுத் தரப்பு சாட்சிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.





