கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பகுதிக்கு தோணி மூலம் கசிப்பு கடத்த முயன்ற 60 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று (10) அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வேனுஜன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் குறித்த வாவிப் பகுதியில் முற்றுகை தேடுதல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, தோணியில் பேரல்களில் அடைத்து கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 150 லீற்றர் கசிப்புடன் ஆரையம்பதியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி தோணியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





