50 வது தேசிய விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் எல்லே போட்டியில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசம் சார்பில் கலந்துகொண்டசெங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம் மகளீர் பிரிவிலும், களுவன்கேணி பாரதி விளையாட்டு கழகம் ஆண்கள் பிரிவிலும் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.
50 வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் எல்லே போட்டி மட்டக்களப்பு பெவர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு (மட்டக்களப்பு) ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) மண்முனை தென் எருவில்ப்பற்று (களுவாஞ்சிக்குடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), மண்முணை மேற்கு (வவுணதீவு), பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிருந்து மகளீர் அணிகள் மாவட்ட மட்ட எல்லே போட்டியில் கலந்துகொண்டன.
இறுதிப்போட்டிக்கு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்திருந்து கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழக அணியும் கோறளைப்பற்று தெற்கு (கிரான் ) பிரதேச முறக்கொட்டாஞ்சேனை வுளுஸ்டார் விளையாட்டு கழக அணியும் தெரிவு செய்யப்பட்டன.
இறுதிப்போட்டியில் நாணையச் சுழற்சியில் வெற்றி பெற்ற செங்கலடி கோல்ட் ஸ்டார் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து அணிக்கு வழங்கப்பட்ட 30 பந்துகளில் 13 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முறக்கொட்டாஞ்சேனை வுளுஸ்டார் அணி வழங்கப்பட்ட 30 பந்துகளில் எவ்வித ஓட்டங்களையம் பெறவில்லை.
ஓட்டங்களின் அடிப்படையில் செங்கலடி கோல்ட் ஸ்டார் அணி பதின்முன்று (13) ஓட்டங்களினால் வெற்றிபெற்று மட்டக்களப்பு மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் ஆகஸ்ட் மாதம் அம்பாறையில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண மட்ட போட்டிக்கும் தகுதிபெற்றது.
ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு கழக அணி ம்ற்றும் களுவன்கேணி பாரதி விளையாட்டு கழக அணிகளுக்கிடையே நடைபெற்து.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற களுவன்கேணி பாரதி விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. வழங்கப்பட்ட 30 பந்துகளில் 5 ஓட்டங்களைப் பெற்று, எதிரணிக்கு 6 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு கழகம் 30 பந்துகளில் 4 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால், ஒரு ஓட்டத்தினால் களுவன்கேணி பாரதி விளையாட்டு கழகம் வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் ஆகஸ்ட் மாதம் அம்பாறையில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண மட்ட போட்டிக்கும் தகுதிபெற்றது.
ந.குகதர்சன்






