வாழைச்சேனை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .




மட்டக்களப்பு மாவட்டம்,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேனி தாமரை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுங்கான்கேனி பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா மகேந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தாமரை குளத்தில் மீன்பிடிப்பதற்காக வலையை வீசிவிட்டு, மறுநாள் காலை அதனை எடுப்பதற்காகச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் குளப் பகுதிக்குச் சென்று தேடியுள்ளனர். இதன்போது அவர் குளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கு வலிப்பு நோய் (காக்காய் வலிப்பு) இருந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அதன் காரணமாகவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.