நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 60 கைதிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணியளவில் அழைத்து வரப்பட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பெரும் மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் 5 பேர் உட்பட 25 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்தே, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் (STF) பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர். கைதிகள் வருகையையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
400 கைதிகளை மட்டுமே பராமரிக்கக்கூடிய கொள்ளளவு கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலை, ஏற்கனவே கடுமையான இடநெருக்கடிக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது நீர்கொழும்பிலிருந்து அழைத்து வரப்பட்ட 60 கைதிகளுடன் சேர்த்து மொத்த கைதிகளின் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





