மட்/ சிவாநந்த வித்தியாலயத்தில் ஸ்தாபகர் தின விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்வு .

 



























































மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய (தேசிய பாடசாலை) ஸ்தாபகர் தின விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) பாடசாலை சமூகத்தின் பங்களிப்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அன்று காலை 07.30 மணியளவில் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து சிறப்பு ஊர்வலம் இடம்பெற்றது. ஊர்வலத்தின் நிறைவில், பாடசாலையைத் தாபிப்பதற்கு நிலமும் நிதியும் வழங்கி உபகாரம் செய்த சான்றோர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதனைத் தொடர்ந்து, முற்பகல் 10.00 மணியளவில் பாடசாலையின் சுவாமி நடராஜானந்த ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதான அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பாடசாலை அதிபர் திரு. சபாபதிப்பிள்ளை தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் ஆசியுரை வழங்கினார்.

  • பிரதம அதிதி: மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. தம்பிப்பிள்ளை கோகுலகுமாரன்

  • சிறப்பு அதிதிகள்: K.O.V. நம்பிக்கை நிதியத்தின் தலைவர் கலாநிதி கனகராசா பிறேம்குமார் மற்றும் சபாபதிப்பிள்ளை உடையார் நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதி திரு. இராசையா பிரபா

மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம் மற்றும் அதிபரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் முக்கிய அங்கமாக, பாடசாலையின் புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் அவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலையின் பல்வேறு துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்த மாணவர்களுக்கு 'ஸ்தாபகர் தின விருதுகள் - 2026' வழங்கி கௌரவிக்கப்பட்டது:

  • சிறந்த மாணவர் தலைவர் விருது: செல்வன் ஏ. அட்சரன்

  • சிறந்த சாரணர் விருது: செல்வன் கோ. சபீலன்

  • சிறந்த மெய்வல்லுனர் விருது: செல்வன் ந. சரோன்

  • சிறந்த வெளிக்களப் போட்டிக்கான விருது: செல்வன் உ. பிரபஞ்சன்

  • சிறந்த விடுதி மாணவர் விருது: செல்வன் சு. கிரிதரன்

  • சிறந்த ஒழுக்க அர்ப்பணிப்புள்ள மாணவர் விருது: செல்வன் ஜோ. ஜோபு

இவ்விழாவில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

பாடசாலைப் பிரதி அதிபர் திரு. த. குலேந்திரகுமார் அவர்களின் நன்றியுரையுடனும், பாடசாலைக் கீதத்துடனும் விழா இனிதே நிறைவுற்றது.