விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இனி எந்த ஒரு துறையிலும் பல்கலைக்கழக கல்வி கற்க வாய்ப்பு.

  


 

இலங்கையில் விசேட தேவையுடைய மாணவர்கள் எதிர்வரும் காலங்களில் மருத்துவத்துறை, பொறியியல் துறை மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட தங்களின் திறமைகளுக்கு ஏற்ற எந்தவொரு துறையிலும் பல்கலைக்கழக உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் விசேட தேவையுடையோர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் விசேட தேவையுடையோர் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும்போது மனிதநேய மற்றும் சமூக அறிவியல் (கலைத்துறை), மேலாண்மை, பௌதிக அறிவியல் மற்றும் உயிரியல் அறிவியல் ஆகிய நான்கு பிரதான துறைகளுக்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையை தற்போதைய அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதோடு, இனிவரும் ஆண்டுகளில் திறமைமிக்க வி.சேட தேவையுடையேோர் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற எந்தவொரு உயர்கல்வித் துறையையும் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.


சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க விசேட தேவையுடையோர் நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விசேட சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதோடு, அது மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அதேபோன்று, நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான செவிப்புலன் குறைபாடுடையோரின் தகவல் தொடர்பாடலுக்குப் பயன்படும் சைகை மொழியை, நாட்டின் ஏனைய மொழிகளான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்று சட்டப்பூர்வமாக்குவதற்கான விசேட சட்டமூலமும் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன் அதுவும் சட்டமாக்கப்படும். மேலும், நாட்டில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விசேட தேவையுடையோர்களைக் கொண்ட சுமார் 175,000 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக அரசாங்கத்தினால் மாதாந்தம் 5,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கல்வித் துறையைப் பொறுத்தவரை, பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மற்றும் ஏனைய மாதாந்த அரச நிதியுதவிகள் 100 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, 2026 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக விசேட தேவையுடையோர் பல்கலைக்கழக மாணவர்களுக்காக மாதாந்தம் மேலும் 5,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் சுயலாபங்களுக்காக ஜனாதிபதி நிதியம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போது அந்த நிதியம் முற்றிலும் மக்களின் அத்தியாவசிய நலன்புரிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது நாட்டின் 17 அரச பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் சுமார் 370 விசேட தேவையுடையோர் மாணவர்களுக்கும், அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் அனைத்து விசேட தேவையுடையோர் மாணவர்களுக்கும் அவர்களின் முதலாம் ஆண்டிலேயே ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நிதியுதவிகளை நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இறுதியாக, இனம், மொழி, பாலினம் அல்லது எவ்வித உடல் ரீதியான குறைபாடுகளும் இன்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் சமத்துவம் மற்றும் நீதியானதொரு சமூகத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.