இம்ரான் மகரூப் கிண்ணியா பிரீமியர் லீக்’ ஆரம்பம்!










மட்டு -துஷாரா

திருகோணமலை மாவட்டத்தில் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி, மாவட்டத்தின் மறைந்திருக்கும் திறமையான இளம் வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கு இட்டுச் செல்லும் உயரிய நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “இம்ரான் மகரூப் கிண்ணியா பிரீமியர் லீக் (KPL)” 20 ஓவர் கிரிக்கெட் தொடர், கடந்த 4 ஆம் திகதி கிண்ணியா எழில் அரங்கு பொது விளையாட்டு மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக ஆரம்பமானது.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தலைமையிலும் முழுமையான அனுசரணையிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர், திருகோணமலை மாவட்டத்தின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என அவர் உறுதிகொள்கிறார்.

இந்த தொடரில் பிரதேச செயலாளர், நகர சபைத் தலைவர், பொலிஸ் உயர் அதிகாரிகள், கிரிக்கெட் சபை நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இந்தத் தொடர் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தின் மூலை முடுக்குகளில் மறைந்து கிடக்கும் கிரிக்கெட் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உயர்மட்ட போட்டிகளில் தங்களை நிரூபிப்பதற்கான களம் அமைத்துக் கொடுப்பதே இந்தத் தொடரின் பிரதான நோக்கமாகும் என்றும் எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் நமது மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் இடம்பிடிப்பதற்கான வலுவான அடித்தளத்தை இந்த முயற்சி அமைக்கும் என்று கூறினார்.

இது வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல; திருகோணமலை மாவட்ட விளையாட்டின் எதிர்காலத்தை நோக்கிய ஒரு நீண்டகால முதலீடாகும். எமது இளைஞர்களின் திறமைகளை உலக அரங்கிற்கு இட்டுச் செல்லும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாகும்.

இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ‘நாம் அனைவரும் திருகோணமலையினர்’ என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைந்து, இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒருங்கிணைந்த முயற்சியால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிக்கும் வீரர்களை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும் என்றார்.