ந.குகதர்சன்
செங்கலடி ஐயன்கேணி கிராமங்களை உள்ளடக்கிய 28 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணிகளை நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் அளவீடு செய்ததால் அந்த கிராம மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்தது.
இன்றை தினம் (25) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஐயன்கேணி கிராமசேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய 28 ஏக்கர் காணிகளை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நில அளவை திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்த நிலையில் அந்த பகுதி மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதோடு அது குறித்து கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிரவு, பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த 28 ஏக்கர் காணிக்குள் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் குடியிருப்புகள், ஆலயம், பாடசாலை, மற்றும் மைதானம் என ஒரு கிராமமே இருக்கும் நிலையில் தற்போது இந்த கிராமத்திற்கு உரிமை கோரி காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கு தாக்கல் செய்தமை ஐயன்கேணி கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன், ஐயன்கேணி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் பொதுமக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்
காத்தான்குடியில் உள்ள ஒருவர் இப்பகுதியில் உள்ள 28 ஏக்கர் காணி தமக்கு சொந்தமானது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை அடையாளம் காண்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்றைய தினம் காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது.
நீதி மன்றம் அதன் கடமையைச் செய்து இந்த காணி யாருக்கு சொந்தம் என்பதை தெரிவிக்கு நாம் நீதி மன்றத்தை மதிக்க வேண்டும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க முடியாது.
ஆனால் இது இரண்டு தனி நபர்களுக்கு இடையிலான வழக்கு என்றால் நாம் இதில் தலையிட முடியாது தலையிடவும் தேவையில்லை.
இப்போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அளவீடு செய்யப்படும் 28 ஏக்கர் காணி எல்லைக்குள் சுமார் நூறுக்கு மேற்பட்ட மக்கள் குடியிருப்புகள், ஆலயம், பாடசாலை, மைதானம் என ஒரு கிராமமே இருக்கும் போது இதனை ஒரு சமூகப் பிரச்சினையாக அனுக வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்கு உள்ளது.
திடிரென தங்களது குடியிருப்பு பகுதிகளை அளவீடு செய்ததால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தங்களது காணிகள் பறிக்கப்படப்போகிறதா என்ற அச்சம் நிலவியதால் அவர் இங்கு ஒன்று கூடியுள்ளனர்.
தாங்கள் வாழும் குடியிருப்பு காணிகளுக்கு நீதி மன்ற வழக்கு போடப்பட்டுள்ளமை அவர்களுக்கு தெரியாத நிலையில் நீதி மன்ற வழக்கு குறித்த ஆவணங்களை பெற்று நீதிமன்றம் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு .
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறும் நிலையில் தற்போது இந்த பகுதிகள் தங்களுக்கு சொந்தமானது என கூறி வழக்கு தாக்கல் செய்தமை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவு இதற்கான தீர்வை நீதிமன்றம் ஊடாக தீர்த்து தருவதற்கு மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தன்னிடம் தெரிவித்ததாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார்.