பழங்களை பழுக்க வைப்பதற்காக நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் .

 



பழங்களை பழுக்க வைப்பதற்காக நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

சந்தையில் முறையாகப் பழுக்க வைக்கப்படாத மற்றும் பல்வேறு இரசாயனங்களைப் பயன்படுத்திக் காய்கறி மற்றும் பழங்கள் விற்கப்படுவது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழம், மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களில் இத்தகைய நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட இடங்களை முற்றுகையிட்டு அதிரடி நடவடிக்கைகளை எடுக்குமாறு துறைசார் அமைச்சகம் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.