மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான பாசம் எல்லைகளற்றது என்பதை நிரூபிக்கும் வகையில், இலங்கையில் சிறுமி ஒருத்திக்கும் முள்ளம்பன்றிக்கும் இடையேயான அபூர்வ நட்பு இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளி ஒன்றில், சிறுமி ஒருத்தி பச்சைப்பசேல் என்ற நெல் வயல் வரப்பில் நடந்து செல்ல, அவளுக்குப் பின்னால் ஒரு பூனையும், அச்சமே இல்லாமல் ஒரு சிறிய முள்ளம்பன்றியும் அவளைப் பின்தொடர்ந்து செல்கின்றன. பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய இக்காணொளி, உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் வென்றுள்ளது.
இக்காணொளி பங்களாதேஷில் எடுக்கப்பட்டது என்ற தவறான தகவலுடன் இணையத்தில் பரவிய போதிலும், உண்மைத் தேடலில் இது இலங்கையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த 'ஸ்வேதா' என்ற இந்தச் சிறுமியைப் பற்றி அறிந்து கொள்வதற்காக ஊடகக் குழுவினர் அவளது வீட்டிற்குச் சென்றபோது, பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகின.
அன்பான சூழலில் பல விலங்குகளைப் பராமரித்து வரும் ஸ்வேதாவின் குடும்பத்தினர், இந்த முள்ளம்பன்றி தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதைப் பகிர்ந்துகொண்டனர்:
ஒரு நாள் நாய்கள் பயங்கரமாகக் குரைக்கும் சத்தம் கேட்டுச் சென்று பார்த்தபோது, தகரக் குவியலுக்குள் நாய் கடித்ததில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முள்ளம்பன்றிக் குட்டியை சிறுமியின் தாய் கண்டெடுத்துள்ளார்.
விலங்குகள் படும் துயரத்தைக் கண்டு பொறுக்காத சிறுமி ஸ்வேதாவும் அவளது குடும்பத்தினரும், உடனடியாக அதை மீட்டு, அன்போடு அரவணைத்து, அதற்குத் தேவையான சிகிச்சைகளை அளித்துக் குணப்படுத்தியுள்ளனர்.
முள்ளம்பன்றி முழுமையாகக் குணமடைந்த பிறகு, அதை அவர்கள் கூண்டில் அடைத்து வைக்கவில்லை. அது காட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகை செய்தனர். ஆனால், காட்டை நோக்கிச் சென்ற அந்த முள்ளம்பன்றி, தன்னை வாழ வைத்த பாசக் கரங்களை மறக்காமல், தினமும் தானாகவே ஸ்வேதாவின் வீட்டிற்குத் திரும்பி வரத் தொடங்கியது.
அன்று முதல் இன்று வரை, அந்த முள்ளம்பன்றி ஸ்வேதாவின் குடும்பத்தில் ஒரு செல்லப் பிராணியாக, அன்புக்குரிய உறுப்பினராகவே மாறிவிட்டது. "நாங்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தாலும், இயற்கையோடு இயைந்த சூழலில் இருப்பதால், சிறுவயது முதலே ஸ்வேதாவிற்கு விலங்குகள் மீது அலாதியான அன்பும், அவற்றுடன் எளிதில் பழகும் தனித்துவமான குணமும் இயல்பாகவே அமைந்துள்ளது" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவளது தாய்.
மனிதநேயமும், சக உயிர்கள் மீதான கருணையும் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்தில், இந்தச் சிறுமி மற்றும் முள்ளம்பன்றியின் தூய்மையான நட்பு, இயற்கையையும் விலங்குகளையும் நாம் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கான ஒரு சக்திவாய்ந்த உலகளாவிய பாடமாகத் திகழ்கிறது.
.png)




