நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது கோரிக்கைகள் கிடைத்து வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மீரிகம வைத்தியசாலையில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே பல்வேறு தரப்பு தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தில் மாத்திரமன்றி சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் கோரிக்கைகள் உள்ளன.
ஏனைய சில தொழில் வல்லுநர்கள் தங்களால் மேலும் சிறிது காலம் பணியாற்ற முடியும் எனத் தெரிவித்து, இந்த ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.
சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அந்தக் கோரிக்கைகளை நாம் பரிசீலித்து வருகிறோம்“ என தெரிவித்தார்.





