பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (01.07.2026) கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இ. சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு இச்சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
‘சிசு செரிய’ என்பது பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டுமே பயணிக்கக்கூடிய பிரத்தியேக பேருந்துச் சேவையாகும். இத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணம் மட்டுமே அறவிடப்படுவதுடன், மீதித் தொகை அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படுகிறது.
இச்சேவையின் முக்கிய சிறப்பம்சம், மாணவர்களுக்கு வழங்கப்படும் டிஜிட்டல் அட்டையாகும். மாணவர்கள் பேருந்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் அந்த அட்டையைப் பதிவு செய்தவுடன், அவர்களின் பயண நேர விவரங்கள் உடனடியாக பெற்றோரின் கைத்தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுவதோடு, பெற்றோர்களுக்கும் மனநிம்மதி கிடைக்கிறது.





