முகநூல் வழியே அறிமுகமான போலி வெளிநாட்டு மருத்துவரிடம் பரிசுப் பொதியைப் பெறுவதற்காக, மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை ஏமாந்து இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
லண்டனில் மருத்துவராகப் பணிபுரிவதாகக் கூறி, 'டான்' என்ற பெயரில் இயங்கிய நபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி அப்பெண்ணுக்கு முகநூலில் நட்புக் கோரிக்கை அனுப்பியுள்ளார். இருவரும் சில நாட்கள் பேசி வந்த நிலையில், 16ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய வெளிநாட்டுப் பொதி விநியோக மையத்திலிருந்து பேசுவதாகக் கூறி ஒரு போலி அழைப்பு வந்துள்ளது. அதில், லண்டனிலிருந்து 'டான்' அனுப்பிய பல லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொதி ஒன்று வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, சுங்கத் திணைக்களத்திலிருந்து (Customs) அப்பொதியை விடுவிக்கக் கூறி முதற்கட்டமாக ரூ. 87,000 வங்கிச் கணக்கில் செலுத்துமாறு கோரவே, அதனை நம்பிய அப்பெண்ணும் அப்பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னரும் பொதியை விடுவிக்க மேலும் பணம் வேண்டும் என அச்சுறுத்தி, சிறுகச் சிறுக ரூ. 3 லட்சம், பெண்ணின் தாயாரிடமிருந்து ரூ. 3.5 லட்சம் மற்றும் கூடுதலாக ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 8.37 லட்சத்தை அந்த மோசடிக் கும்பல் பறித்துள்ளது.
மேலும் ரூ. 1.5 லட்சம் கேட்டபோது சந்தேகமடைந்த பெண், பணம் தர மறுத்துள்ளார். உடனே மோசடிக் கும்பல் தமது தொலைபேசி எண்களைத் துண்டித்து தலைமறைவாகியுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் முகவரி தெரியாத நபர்களின் நட்பை நம்பி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம். வெளிநாட்டிலிருந்து மதிப்புமிக்க பரிசுகள் வந்துள்ளதாகக் கூறி பணம் கோரும் இணையவழி மோசடிக் கும்பல்களிடம் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





