மட்டக்களப்பு நகரையும் பூம்புகார் (உப்பு கராச்) பகுதியையும் இணைக்கும் பிரதான பாலம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ் விபத்தின்போது பாலத்தைக் கடக்க முயன்ற பொதுமக்கள் பலரும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
வழக்கம்போல போக்குவரத்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மாலை வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாலத்தின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து உள்வாங்கியதை அடுத்து, அங்கே பயணித்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். "இன்னும் சில நொடிகள் தாமதித்திருந்தால், பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்" என நேரில் பார்த்தவர்கள் பதட்டத்துடன் விவரிக்கின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரும், மாநகர சபை ஆணையாளரும் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்தனர். இடிந்து விழுந்த பாலத்தைப் பார்வையிட்ட அவர்கள், சேத விபரங்கள் குறித்தும், அடுத்தகட்ட அவசர நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
தற்போது விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ள போலீசார், பாலம் இடிந்து விழுந்ததற்கான பின்னணி குறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து மட்டக்களப்பு மக்களிடையே கடுமையான கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் இப்போது எழுந்துள்ள பிரதான கேள்விகள் இவைதான்:
பாலம் இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணம் என்ன? முறையற்ற பராமரிப்பா? அல்லது தரமற்ற கட்டுமானமா?
மக்களின் உயிரோடு விளையாடிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது?
இந்த விபத்தையடுத்து, மட்டக்களப்பில் உள்ள ஏனைய பாலங்கள் ஊடாகவும் பயணம் செய்ய பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். "தினமும் நாம் கடந்து செல்லும் பாலங்கள் எவ்வளவு தூரம் பாதுகாப்பானவை?" என்ற அச்சக் கேள்வி இப்போது ஒவ்வொரு மட்டக்களப்புவாசியின் மனதிலும் எழுந்துள்ளது.
உரிய தரப்பிலிடமிருந்து இதற்கான பதிலும், உரிய தீர்வும் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்பதே தற்போதைய பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.












