வந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான ரதோற்சவம் .















கிழக்கிலங்கையின் திருப்பதியாக சிறப்பித்து கூறப்படுகின்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான ரதோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று 28.06.2026 காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.

வந்தாறுமூலை மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 17.06.2026 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 12 நாட்கள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை தம்ப பூஜை, மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து மலர் மழை சொரிய அடியார்களின் கோவிந்தா கோசத்தின் மத்தியில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பெருமான் உள்வீதி வலம்வந்து வெளிவீதி வந்து ரதத்திலே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதன்போது தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து பக்த அடியார்கள் வடமிழுக்க ரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பெருமானுக்கு பச்சை சாற்றப்படும் நிகழ்வு இடம்பெற்று ரதோற்சவம் இனிதே நிறைவுற்றது.

நாளை 29.06.2026 அதிகாலை களுவன்கேணி சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.