பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்.

 


அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயக்குநர்கள் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பாரதிராஜா ஆகியோரின் உதவி இயக்குநராக அவர் பணியாற்றினார். கடந்த 1977-ல் தனது திரைப்பயணத்தை அவர் தொடங்கினார்.

இதில் பாரதிராஜாவுடன் ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். கிழக்கே போகும் ரயில் மற்றும் டிக் டிக் டிக் படங்களுக்கு பாரதிராஜாவுடன் இணைந்து கதை எழுதினார். சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு வசனம் எழுதியவர், துணை கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வந்தார். 

சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிய அவர், தனது படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னுபோச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, அவசர போலீஸ் 100, ராசுக்குட்டி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சொக்கத்தங்கம், சித்து +2 உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். இதோடு திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைத்து, பாடலும் பாடி உள்ளார். ‘பாக்யா’ என்று வார இதழின் ஆசிரியராக இயங்கி வந்தார்.

‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் பாக்யராஜின் படங்கள் ஜனரஞ்சகமாக இருக்கும். கதை, வசனங்கள், காமெடி என அவரது படங்கள் கவனம் ஈர்க்கும். சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்டவர்.

தனது சினிமா பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் இணைந்து அவர் பணியாற்றி உள்ளார். இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பாக்யராஜின் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10-ம் தேதி இயக்குநர் பாரதிராஜா காலமான நிலையில் இன்று (ஜூன் 27) இயக்குநர் பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக காலமானது திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.