இரத்த தான முகாம்களை முன்மாதிரியாக நடத்திய கதிராவெளி பிரதேச வைத்தியசாலைக்கு மட்டக்களப்பில் உயரிய கௌரவம்!






மட்டக்களப்பு: தொடர்ச்சியாக இரத்த தான முகாம்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து, பல உயிர்களைக் காக்கும் உன்னத மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு, கதிராவெளி பிரதேச வைத்தியசாலைக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் இந்த பாராட்டு மற்றும் கௌரவிப்பு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய கிராமப்புறப் பகுதியாக இருக்கும் கதிராவெளி மக்களின் நலன் கருதியும், சமூக மேம்பாட்டிற்காகவும் கதிராவெளி பிரதேச வைத்தியசாலை அர்ப்பணிப்புடன் ஆற்றி வரும் சேவையின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த அங்கீகாரம் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கதிராவெளி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி (MOIC) வைத்தியர் J. P. நிரோஜன் தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
துறைசார் அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்றி
இந்த வெற்றிகரமான பயணத்திற்கு தகுந்த வழிகாட்டல்களையும், அனுமதியையும் வழங்கி ஆதரவளித்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வைத்தியசாலை நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்த மைல்கல்லுக்குக் காரணமான முன்னைய மருத்துவ அதிகாரியான வைத்தியர் K.D.G. குருகே, தற்போதைய மற்றும் முன்னாள் தாதிய உத்தியோகத்தர்கள் (ரோஷினி, ஹர்சினி, பாஹிமா, ஆயிஷ்மா, ஜெயமாலி, தாரா, மதுஷினி), சுகாதார உதவியாளர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க கூட்டு உழைப்பும் இதன்போது நன்றியுடன் நினைவுகூரப்பட்டது.
பாதுகாப்புத் தரப்பினரின் பங்களிப்பு
இரத்த தான முகாம்களைப் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வரும் வாகரை விசேட அதிரடிப்படை (STF) முகாம், வாகரை 233வது படைப்பிரிவு இராணுவ முகாம், புச்சாகேணி இராணுவ முகாம் மற்றும் வாகரை பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கும் வைத்திய அதிகாரி தனது இதயபூர்வமான நன்றியைப் பதிவு செய்துள்ளார்.

இப்பணிகளுக்குத் தூணாக விளங்கிய முக்கிய அனுசரணையாளர்களான:
திருமதி கீதா சுதாகரன்      
  வைத்தியர் S. லிவிட்டன் மற்றும் மட்டக்களப்பு ரோட்டரி கழகம்
திரு. தங்கராஜா குடும்பத்தினர்
      திரு. G.P.H.H. சில்வா (முன்னாள் பொறுப்பதிகாரி, வாகரை பொலிஸ் நிலையம்)
      திரு. T.M.A.G.M.C. பிரேமரத்ண (பொறுப்பதிகாரி, விசேட அதிரடிப்படைப்பிரிவு - வாகரை)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
ஆகியோரின் தாராள மனப்பான்மைக்கும் ஆதரவிற்கும் விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 ஒரு இரத்த தானம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஒன்றிணைந்து நாம் மாற்றத்தை உருவாக்குவோம்" என்ற உன்னத நோக்கோடு, இரத்த தானம் என்ற உயரிய மனிதநேய பணியை மேலும் ஊக்குவித்து, சமூகத்திற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை செய்ய கதிராவெளி பிரதேச வைத்தியசாலை உறுதிய பூண்டுள்ளதாக அதன் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் J. P. நிரோஜன் மேலும் தெரிவித்துள்ளார்.