SIVAKUMAR
தமிழ் மொழியின் மீதும், இலக்கியத்தின் மீதும் பற்றுக்கொண்டோரை ஒன்றிணைக்கும் வகையில், கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ‘ஒளவை அவை’ நடத்தும் "ஒளவை விழா - 2026" தொடர்பான விசேட ஊடக சந்திப்பு, இன்றைய தினம் (15.06.2026) மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
"வேல்முருகன் சகோதரர்கள்" அமைப்பின் பிரதான அனுசரணையுடன், கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் தலைவர் கதிரவன் இன்பராசா தலைமையில் இந்த ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது. இதில் மட்டக்களப்பு பிராந்திய மற்றும் தேசிய ஊடகவியலாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
கதிரவன் பட்டிமன்ற பேரவை மற்றும் மட்டக்களப்பு வேல்முருகன் சகோதரர்கள் இணைந்து நடத்தும் இரண்டாவது 'ஒளவை விழா - 2026', வரும் 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு, மட்டக்களப்பு கல்லடி பால ஒளவை முற்றத்தில் மிக விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்விழாவினைப் பொதுமக்களிடமும், வெளியுலகிற்கும் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கோடும், ஊடகவியலாளர்களின் ஆதரவைக் கோரும் வகையிலுமே இந்த விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்குத் தமிழ் அன்னையின் பெருமையையும், ஒளவையாரின் உன்னதமான இலக்கியப் பங்களிப்புகளையும் கொண்டு சேர்த்து, அவர்களைப் போற்றும் வகையில் இந்த ஒளவை விழா மிக பிரம்மாண்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஊடக சந்திப்பின் நிறைவில், வருகை தந்திருந்த பிராந்திய மற்றும் தேசிய ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக, விழா ஏற்பாட்டாளர்களினால் விசேட நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.



















