மட்டக்களப்பில் தீவிரமடையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: கல்லடிப் பகுதியில் மாநகர சபை முதல்வரின் தலைமையில் பாரிய பரிசோதனை!

 



























நாடு முழுவதும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்திலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆகியன சுகாதாரத் தரப்பினருடன் இணைந்து தொடர்ச்சியான தடுப்புச் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதன் முக்கிய அங்கமாக, இன்றைய தினம் (26.06.2026) மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்புச் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, கல்லடிப் பிரதேசம் இன்று விசேட இலக்காகத் தெரிவு செய்யப்பட்டது. கல்லடி மணிக்கூட்டு கோபுரச் சந்தி முதல் பழைய கல்முனை வீதி வரையான பகுதியில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் பாரிய டெங்கு பரிசோதனைச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விசேட நடவடிக்கையின் போது:

  • அப்பகுதியிலுள்ள பொது வடிகான்கள், வீடுகள் மற்றும் பாழடைந்த வெற்றுக்காணிகள் என்பன தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

  • வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் மாநகர சபை ஊழியர்களால் உடனடியாக அகற்றப்பட்டு துப்புரவாக்கப்பட்டன.

  • டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைகளும் விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன.

தேசிய ரீதியிலான இந்த விசேட டெங்கு ஒழிப்புச் செயற்திட்டத்தில் மட்டக்களப்பின் முக்கிய  அரச    அதிகாரிகள் பலரும் களமிறங்கிப் பணியாற்றினர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் R. முரளீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி E. உதயகுமார், மாநகர சபை ஆணையாளர் எஸ். தனஜெயன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை வழிநடத்தினர்.

அவர்களுடன் இணைந்து அப்பகுதி கிராம சேவை அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது சுகாதார உத்தியோகத்தவர்கள்  ,மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.