காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி, தீன் ரோட் வீதியில் அமைந்துள்ள வெல்டிங் நிலைய மொன்றிலேயே இந்தத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வெல்டிங் நிலையத்தில் திடீரெனப் பற்றிய தீ, சில நிமிடங்களில் அக் கடை முழுவதற்கும் பரவி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
அத்துடன், தீயின் வேகம் காரணமாக அருகிலிருந்த மருந்தக நிலையத்திற்கும் தீ பரவியதை அடுத்து, அக் கடையும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவம் குறித்து மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் காத்தான்குடி நகர சபை ஆகியவற்றின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தீயணைப்புப் படையினருடன் இணைந்து பிரதேச பொதுமக்களும் நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீ விபத்து காரணமாக உயிராபத்துகள் எதுவும் ஏற்படாத போதிலும், இரு கடைகளிலும் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அண்மைய நாட்களாக காத்தான்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீ விபத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை பிரதேச மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது



.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)





