மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் நேற்றைய தினம் (27) பாடசாலையின் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட உள்ளக அரங்கில் கோலாகலமாக இடம் பெற்றது.
புனித மிக்கேல் கல்லூரியின் கொழும்பு கிளை பழைய மாணவர் சங்க தலைவர் எஸ். சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி மற்றும் கூடைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய யேசுசபை துறவி
ஜோன் ஹெபர்ட் அவர்களின் திருவுருவப் புகைப்படம், பாடசாலை பழைய மாணவர் சங்க உதவி போசகரும் யேசுசபை துறவியுமான அருட்தந்தை போல் சற்குணநாயகம்
அடிகளாரினால் உத்தியோக பூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி பாடசாலைகள் பங்கேற்றுள்ள இப்போட்டித் தொடரில், 20 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் களமாக அமைந்தது.
இந்நிகழ்வில் யேசுசபை மேலாளர் அருட்தந்தை ரீ. சகாயநாதன், யேசுசபை துறவி அருட்தந்தை அ.அ. நவரெட்ணம், பாடசாலை அதிபர் அன்டன் வெணடிக் ஜோசப், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தேசபந்து எம்.செல்வராசா, கொழும்பு கிளை பழைய மாணவர் சங்க செயலாளர் ஜீ. பிரசாந்தன், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள், இவ்வாண்டுடன் ஒன்பதாவது முறையாக நடைபெறுவதுடன், இளம் கூடைப்பந்தாட்ட வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் முக்கிய விளையாட்டு நிகழ்வாக மாவட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


.jpeg)



.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)




