மட்டக்களப்பு நகரின் பிரதான போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான மட்டக்களப்பு புதுப்பாலத்தின் (New Bridge) ஒரு பகுதி நேற்று மாலை திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற றுப்பினர் பிரபு கந்தசாமி அவர்களால் இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தற்காலிக பாலம் ஒன்றை அமைப்பதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த திடீர் அனர்த்தம் குறித்து, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்னாயக்க மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தி ஆகியோருடன் உடனடியாகத் தொடர்புகொண்டு நிலைமை விளக்கிக் கூறப்பட்டது.
அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரிடமும் இப்பிரச்சினை குறித்து அவசரமாக கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக இப்பாலம் விளங்கி வருகிறது. குறிப்பாக, வாழைச்சேனை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் இருந்து அவசர சிகிச்சைக்காக நோயாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விரைவாகக் கொண்டு சேர்ப்பதற்கான பிரதான தடையற்ற பாதையும் இதுவேயாகும்.
இதனைக் கருத்திற் கொண்டு, மக்களின் நலன் கருதி குறித்த பகுதியில் உடனடியாக தற்காலிக 'பெய்லி பாலம்' (Bailey Bridge) ஒன்றினை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, அதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு தற்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளினால் பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
.png)




