மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் உயிரிழப்பு!

 



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக கடந்த 17ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், 7ஆம் இலக்க விடுதியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 18ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி அவருக்குச் சுகப்பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்ததுடன், பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட தொடர்ச்சியான குருதிப்போக்கு காரணமாகச் சுமார் 12 பைண்ட் இரத்தம் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட போதிலும், டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால் அவரது இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் ஆகிய முக்கிய உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. இந்த நிலையில், கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 10:00 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.