சென்னையில் இன்று நடைபெற்ற போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தன் போட்டியை தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததுடன், அதில் பங்கு பற்றினார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததுடன், மூன்று கிலோமீற்றர் தொலைவு வரை ஓடினார்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதில் 'ஓடத்தொடங்குங்கள்! போதை பொருள் பாவிப்பதை நிறுத்துங்கள்! விளையாடத் தொடங்குங்கள்! போதை பொருளை கைவிடுங்கள்!' எனும் வாசகத்தை எழுதி, முதல்வர் விஜய் கை சாத்திட்டார். அத்துடன் இந் நிகழ்வில் பங்கு பற்றிய அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியையும் தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் அமைச்சர்கள் என். ஆனந்த்- ஆதவ் அர்ஜுனா - வெங்கடரமணன் - மரிய வில்சன்- உள்ளிட்ட அமைச்சர்களும், கட்சியின் நிர்வாகிகளும், பொதுமக்களும் , தொண்டு நிறுவன தன்னார்வலர்களும் பங்கு பற்றினர்.
இதனிடையே இந்த நிகழ்வில் பங்கு பற்றி விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ''இந்தியாவில் உள்ள முதல்வர்களில் மாரத்தான் போட்டியில் பங்கு பற்றி மூன்று கிலோ மீட்டர் தூரம் ஓடிய ஒரே முதல்வர் ஜோசப் விஜய் தான்'' என குறிப்பிட்டார்.




