கதிர்காம காட்டுப் பாதை திறப்பில் மாற்றமில்லை! லாகுகலையில் கூட்டம்! ஊடகங்களுக்கு கதவடைப்பு; அன்னதானம் கட்டுப்பாடு!

   





கதிர்காம காட்டுப் பாதை திறப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி என்பதில் மாற்றமில்லை.

அதேவேளை, உகந்த மலையில் இருந்து குமுக்கன் செல்லும் வழியில் அன்னதானம் தயாரித்து வழங்க தடை. தேவையானால் உகந்தயில் சமைத்து ஓரிரு மணி நேரத்தில் கொண்டு சென்று வழங்கலாம் எனக் கூறப்படுகிறது.

கதிர்காமம் ஆடிவேல்விழா பாதயாத்திரை காட்டுப்பாதை தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டம் லாஹூகல பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள தலைமையில் நடைபெற்றது.

பொது மக்கள் அறியவேண்டிய பல அறிவுறுத்தல்கள் தீர்மானங்களை வெளியிடும் இக் கூட்டத்திற்கு,  ஊடகங்கள் அழைக்கப்படவில்லை. கடந்த தடவை  இவ்வாறு நடைபெற்ற போது அரச அதிபர் முன்னிலையில் அன்றும் அது பற்றி சுட்டிக் காட்டப்பட்டபோது அடுத்த தடவை நிவர்த்தி செய்யப்படும் என்று அப்போது கூறப்பட்டது. எனினும் இம்முறையும் அதே தவறை அதிகாரிகள் எனப்படுவோர் செய்துள்ளதாக ஊடக அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

உகந்தமலை ஆலய வண்ணக்கருக்கும் எழுத்து மூல அழைப்பிதழ் அனுப்பப்படவில்லையெனத் தெரியவருகிறது. அவரும் கூட்டத்திற்கு சமூகமளிக்க வில்லை.

அதேவேளை, ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் சிலருக்கும் சிங்களத்தில் அழைப்பிதழை லாகுகலை பிரதேச செயலாளர் அனுப்பியுள்ளார்.

இதன்போது, 2026 ஆம் ஆண்டுக்கான கதிர்காமம் ஆடிவேல்விழா பாதயாத்திரையுடன் தொடர்புடைய பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதன்படி, கதிர்காமம் நோக்கி காட்டுப்பாதை வழியாகச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்காக காட்டுப்பாதை எதிர்வரும் 2026 ஜூலை 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

அன்று அதிகாலை 5.00 மணிக்கு உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 6.00 மணிக்கு காட்டுப்பாதை திறக்கப்படவுள்ளதுடன், பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் முதல் பாதயாத்திரைக் குழுக்கள் பயணத்தை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 10 ஆம் திகதி முதல் ஜூலை 24 ஆம் திகதி வரை தினமும் காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே பாதயாத்திரிகர்கள் காட்டுப்பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்படையினர்,  அரச உயரதிகாரிகள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் குடிநீர் சேவைகளை முன்னெடுக்கும் சமூக அமைப்புகளாக ஸ்பாண்ட் (SPAND) மற்றும் சைவா (SAIVAA) சமய பணியாளர்கள்  சிவதொண்டர், வலம்புரியோன், சேவற்கொடியோன் மற்றும் சைவநெறிக்கூடம் உள்ளிட்ட பிற சமூக அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தன.

உகந்தமலை முருகன் ஆலய பரிபாலனம் கடந்த மூன்று வருடங்களாக சீர்குலைந்து முறையான நிருவாகம் இல்லாமல் சீரழிந்து வருவதாக கூறப்படுகிறது.
 
 (வி.ரி.சகாதேவராஜா)