தரமற்ற பிளாஸ்டிக் பயன்பாடு: மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

 



உணவு தயாரிப்பின் போதும், உணவுகளை உட்கொள்ளும் போதும் தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான இதுகுறித்த விழிப்புணர்வுத் தகவல்களை வெளியிட்டார்.


சந்தையில் உள்ள பெரும்பாலான பிளாஸ்டிக் பாத்திரங்கள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் உறைகளில் முறையான தர நிர்ணயம் செய்யப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், இவற்றைப் பயன்படுத்தும் போது கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்களான ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ (Microplastics) மற்றும் பீ.பி.ஏ (BPA) போன்ற ஆபத்தான நச்சு இரசாயனங்கள் உணவின் ஊடாக நமது உடலுக்குள் நுழைகின்றன என்றார்.

 

இதுகுறித்து வைத்தியர் சாந்தனி விதான மேலும் விளக்குகையில்:

சூடான தேநீர் அல்லது உணவுகளை பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைப்பதாலும், குழம்பு போன்ற திரவ உணவுகளை பொலித்தீன் உறைகளில் அடைத்து எடுத்து வருவதாலும் பெருமளவிலான நச்சுகள் உணவோடு கலக்கின்றன. இவை இரத்த நாளங்கள் ஊடாகப் பயணித்து மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளில் படிந்து, காலப்போக்கில் அவற்றைச் செயலிழக்கச் செய்கின்றன. அத்துடன், இதன் நீண்டகாலப் பாதிப்பாக புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற உயிராபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தொற்றா நோய்களின் பெருக்கத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவும் பிளாஸ்டிக் உபகரணங்களின் பயன்பாட்டை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பதிலாக, பின்வரும் பாதுகாப்பான மாற்று முறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது:

  • கண்ணாடிப் பாத்திரங்கள் (Glassware)

  • துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் (Stainless Steel)

  • செராமிக் பாத்திரங்கள் (Ceramic)