மட்டக்களப்பு மண்முனை வடக்கில் உலக சுற்றுச்சூழல் தின விசேட மரநடுகை: மியாவாக்கி முறையில் 783 மரக்கன்றுகள் நடப்பட்டன!

 










 







உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் விசேட “மியாவாக்கி வனத் திட்டம்” (Miyawaki Forestry Project) மரநடுகை நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் நடத்தப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. சிவிப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமைத்துவ வழிகாட்டலிலும் ஒழுங்கமைப்பிலும் இந்நிகழ்வு அரங்கேறியது. இதில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு. என். தனஞ்சயன் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.

மேலும், உதவி பிரதேச செயலாளர்களான திருமதி. லக்ஷன்யா பிரசந்தன், திருமதி. சுபா சதாகரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இயற்கையைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கவும், எதிர்கால சந்ததியினருக்குப் பசுமையான சூழலை உருவாக்கவும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த பரப்பளவில் மிக வேகமாக அடர்ந்த வனத்தை உருவாக்கும் ஜப்பானிய ‘மியாவாக்கி’ முறையின் கீழ், இங்கு 100 × 30 அடி நிலப்பரப்பில் 783 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. இவ்விசேட காடாக்க முறையின்படி, மரங்கள் அனைத்தும் இயற்கையான சூழலில் தங்களின் நிலைத்திருப்பிற்காகப் போட்டியிட்டுக்கொண்டு மிக வேகமாக வளரும் அதிசயத்தை இதில் காண முடியும். 

“இன்று நட்ட ஒரு மரம்… நாளைய தலைமுறையின் உயிர் மூச்சாகும்” என்ற உன்னத செய்தியை முன்னிறுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

பசுமை நிறைந்த எதிர்காலத்தை நோக்கி எடுக்கப்பட்ட இந்த உன்னத முயற்சி, இயற்கையுடனான மனிதனின் உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது என நிகழ்வில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.