Sivakumar
ம ட்டக்களப்பு நாவற்குடா தூய சின்ன லூர்து அன்னை திருத்தலத்தில், வணக்க மாதத்தின் இறுதி நாளான கடந்த 31.05.2026 அன்று மாலை 4.30 மணியளவில், விண்ணதிரும் பக்திப் பாடல்களால் தேவ தாய்க்கு பாதகாணிக்கை செலுத்தும் "மரியின் கானங்கள்" என்னும் பிரம்மாண்ட இசை நிகழ்வு பக்திப் பரவசத்துடன் அரங்கேறியது.
நாவற்குடா திருத்தலத்தின் பங்குத்தந்தை அருட்பணி. அழகுதுரை ஜேசுதாசன் அடிகளாரின் சிறப்பான நெறியாள்கை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்விற்கு முதன்மை அதிதியாக நாவற்குடா பங்கின் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. செபஸ்டியன் இக்னேசியஸ் அடிகளார் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, நிகழ்வில் பங்கேற்ற இசைக் கலைஞர்களை ஆசீர்வதித்தார். இவர்களுடன் ஏனைய அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கு வருகை தந்த அதிதிகள் அனைவரும் பாரம்பரிய செபமாலைப் பவனியூடாக பக்திபூர்வமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்கவர் வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே துவங்கியது. பங்குச் சபைச் செயலாளர் Dr. திருமதி. றமாஜினி துஷ்யந்தன் அவர்கள் வரவேற்புரையையும், விழாவின் நிறைவில் நன்றியுரையையும் நெகிழ்ச்சியுடன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பங்குத்தந்தையின் தலைமையுரையும், முதன்மை அதிதியின் ஆசியுரையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக, நாவற்குடா பங்கின் பாதுகாவலியாம் தூய சின்ன லூர்து அன்னை மூலம் நிகழ்த்தப்பட்ட வியக்கத்தக்க புதுமைகள் அடங்கிய புதிய புத்தகம் ஒன்று அன்றைய தினம் முதன்மை அதிதியால் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது. இது அங்கிருந்த இறைமக்கள் அனைவருக்கும் பெரும் ஆன்மீக எழுச்சியை ஊட்டியது.
திரு. யூட் நிரோஷன் அவர்களின் அற்புதமான இசையமைப்பில், நாவற்குடா பங்கின் பாடகர் குழாமினர், பங்குமக்கள் மற்றும் பங்குத்தந்தை ஆகியோர் இணைந்து அன்னையின் புகழ்பாடும் கானங்களை இசைத்தனர். சுமார் 15 திறமையான பாடகர்கள் தங்களின் தேனினும் இனிய குரல்களால் பாடல்களைப் பண்ணிசைத்து, அன்னை மரியாளின் திருப்பாதங்களுக்கு பாமாலை சூட்டினர்.
முழு நிகழ்வையும் திரு. கில்பட் அருள்தாஸ் மற்றும் செல்வி. மதுஷிக்கா ஆகிய இருவரும் தங்களின் சுவாரசியமான, கலகலப்பான தொகுப்பளிப்பால் மேலும் மெருகூட்டினர். இறுதியாக, அன்னை லூர்தின் பேரருளுடனும் ஆசீருடனும் "மரியின் கானங்கள்" இசைப் பெருவிழா இனிதே நிறைவு பெற்றது.




































































