வடக்கு மாகாணத்திலிருந்து 70.1 சதவீதமானோர் உயர்தரப் பிரிவில் கல்வி கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர் .

 


சமீபத்தில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாண மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியை பெற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இதன்படி இம்முறை வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து 70.1 சதவீதமானோர் உயர்தரப் பிரிவில் கல்வி கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மாகாண மட்டத்தில் மொத்தம் 566 மாணவர்கள், தோற்றிய 9 பாடங்களிலும் (A) சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேறியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணம் 69.87 சதவீதத் தேர்ச்சியுடன் தேசிய மட்டத்தில் 9ஆம் இடத்தைப் பெற்றிருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த முறை மாணவர்களின் உயர்தரத்துக்கான தேர்ச்சி வீதத்திலும், தேசிய மட்ட தரவரிசையிலும் வடக்கு மாகாணம் சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எனினும், இந்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 627 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.