ரஞ்சன் சினிமாஸின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் கோடீஸ்வரனின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள 'தீராப்பிடி' திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு ஊடக மையத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரைப்படக் குழுவினர் பலரும் கலந்துகொண்டு படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ரஞ்சன் மணி கருத்துத் தெரிவிக்கையில், "தீராப்பிடி" தாம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் என்றும், சமூக நலன் சார்ந்த கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்களையே தொடர்ந்து தயாரிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தப் படத்திற்கு மக்கள் வழங்கும் ஆதரவே தங்களது அடுத்த படைப்புக்கான உந்துசக்தியாக அமையும் என்றும், அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து திரைப்படத்தைப் பார்த்து ஆதரிக்குமாறும் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.
இயக்குநர் கோடீஸ்வரன் பேசுகையில், வழமைபோல் இந்தப் படத்தையும் "இது உங்கள் சொந்த திரைப்படம்" என்ற உணர்வோடு மக்கள் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இது குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய, சமூகப் பொறுப்புணர்வை எடுத்துரைக்கும் கதை என்றும் தெரிவித்தார். திரைப்படம் எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு விஜயா திரையரங்கில் முதல் காட்சியாக திரையிடப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.
நடிகை கிருஷிகா தனது உரையில், "தீராப்பிடி" தனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று என்றும், இயக்குநர் கோடீஸ்வரனுடன் இணையும் இது தனது இரண்டாவது திரைப்படம் என்றும் கூறினார். ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் நடித்த திரைப்படம் தனக்கு ஒரு விருதைப் பெற்றுத் தந்ததாகவும், இந்தத் திரைப்படமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
நடிகர் குஜேந்தன் கருத்துத் தெரிவிக்கையில், தாம் ஏற்கனவே ஐந்து திரைப்படங்களில் நடித்திருந்தாலும், "தீராப்பிடி" திரைப்படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்ததாக அமைந்ததாகக் கூறினார். இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், அனைவரும் திரையரங்கிற்கு வந்து திரைப்படத்தைப் பார்த்து ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், தயாரிப்பாளர் ரஞ்சன் மணி, திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியபோது, இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.ஜே. நிலு, படத்தொகுப்பை தினு மகேந்திரன், இசையை இளம் இசையமைப்பாளர் சங்கர்ஜன் ஆகியோர் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். திறமையான தொழில்நுட்பக் குழுவின் அர்ப்பணிப்புடன் உருவாகியுள்ள "தீராப்பிடி" திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு விஜயா திரையரங்கில் திரையிடப்படவுள்ள "தீராப்பிடி" திரைப்படத்திற்கு அனைவரும் வருகை தந்து ஆதரவு வழங்குமாறு திரைப்படக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.


















