வெசாக் வாரத்தில் உழ்ஹிய்யா கொடுக்க சுமுகமான தீர்வை வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த இம்ரான் எம்.பி

 

 


 

 

மட்டு - துஷாரா


அரச சுற்றுநிருபத்தை அவதானத்துடன் பின்பற்றுமாறு முஸ்லிம் சமூகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள்!

​இவ்வருட வெசாக் வாரப் பிரகடனம் மற்றும் புனித ஹஜ் பெருநாளின் உழ்ஹிய்யா கடமைகள் ஒரே காலப்பகுதியில் அமைந்ததால் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலைக்கு, அரச சுற்றுநிருபம் மூலம் சுமுகமான தீர்வினை வழங்கிய அரசாங்கத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் சார்பில் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கூறினார்.

​அதேவேளை, தேசிய நல்லிணக்கத்தையும் சமூக சகவாழ்வையும் பேணும் வகையில், பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டல்களை முஸ்லிம் சமூகம் மிக அவதானத்துடன் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

​இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

​"2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் வாரமும், முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாளும் ஒரே வாரத்தில்  அமைந்ததால், உழ்ஹிய்யா மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் மத்தியில் பரவலான அச்சமும் குழப்பமும் நிலவி வந்தது. இது குறித்து நாம் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளையும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முறையான அணுகுமுறைகளையும் பரிசீலித்து, அரசாங்கம் உரிய நேரத்தில் தெளிவான வழிகாட்டலை வழங்கியுள்ளது.

​பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள HA/1/2/වෙසක්/2026 (07.05.2026) இலக்க சுற்றுநிருபத்தின்படி, வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் மாமிச விற்பனை நிலையங்கள், விலங்கறுப்பு நிலையங்களை மூடுவதற்கான தினங்களாக மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

​இதன் மூலம், குறித்த தினங்கள் தவிர்ந்த, மார்க்கம் அனுமதித்துள்ள ஏனைய நாட்களில் உழ்ஹிய்யா கடமைகளைச் சட்ட ரீதியாக நிறைவேற்றுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் மத உரிமைகளை மதித்து, எழவிருந்த சமூகக் குழப்பங்களுக்கு முன்கூட்டியே தீர்வு வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு இந்த நேரத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

​அரசாங்கம் இந்த சுமுகமான தீர்வை வழங்கியுள்ள நிலையில், முஸ்லிம் சமூகம் கள யதார்த்தங்களை உணர்ந்து, மிகுந்த பொறுப்புணர்வுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டியது மிக அவசியமாகும் என்றும் முஸ்லிம்களும், பள்ளிவாசல் நிருவாகங்களும் பின்வரும் விடயங்களை மிகக் கண்டிப்பாகப் பேணுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு தினங்களை (முக்கியமாக மே 30, 31) முழுமையாகக் கருத்திற்கொண்டு, எவ்வித சட்ட அல்லது ஒழுங்குமுறை மீறல்களும் இன்றி உழ்ஹிய்யா கடமைகளைத் திட்டமிட வேண்டும், பிறைக் குழு தீர்மானத்துக்கு அமைவாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ள (மே 28, 29) குறிப்பிட்ட  தினங்களில் மாத்திரம் (மே 30, 31 தினங்களைத் தவிர்த்து) இக்கடமைகளை சுமுகமாக நிறைவேற்ற வேண்டும்.

பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டில், ஏனைய சகோதர சமூகங்களின் மத மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்போ அல்லது மனவருத்தமோ ஏற்படாத வகையில், மிகுந்த கண்ணியத்துடனும் நல்லிணக்கத்துடனும் மார்க்கக் கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும்.

​காலாகாலமாக இந்நாட்டில் ஏனைய சமூகங்களுடன் பரஸ்பர கௌரவத்துடனும் அறிவுபூர்வமாகவும் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகம், இம்முறையும் எமது உயர் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். தேவையற்ற சமூக விரிசல்களுக்கு இடம் கொடுக்காமல், தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்து இப்புனித கடமைகளை நிறைவேற்ற முன்நின்று செயற்பட வேண்டும் என்றும் அவர் இலங்கை வாழ் முஸ்லிம்களை கேட்டுக்கொண்டுள்ளார்.