Sivakumar -chief editor
வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் இந்த 17 வயது மாணவி, சர்வதேச மல்யுத்த அரங்கில் தடம் பதிக்கவுள்ளமை ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திற்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி, திகன பகுதியில் நடைபெற்ற ஆசிய மட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிப் போட்டியில் தவிசாலினி முதலிடத்தைப் பெற்று அசத்தினார். இதன் மூலமாகவே வியட்நாம் போட்டியில் 69-73 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகைமையை அவர் உறுதி செய்தார்.
தவிசாலினியுடன் இணைந்து மேலும் 11 வீர, வீராங்கனைகள் இந்தத் தொடரில் இலங்கையின் சார்பாகக் களம் காண்கின்றனர்.
இலங்கையின் 17 வயதுக்குட்பட்ட மல்யுத்த அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் வேலு திருச்செல்வம் அவர்கள் செயற்படுகிறார். இவரும் அணியுடன் வியட்நாம் பயணமாகவுள்ளார்.
தன்னுடைய 16 வது வயதிலிருந்து மல்யுத்தப் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் மாணவி தவிசாலினி, சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெருமை சேர்க்க நமது ஊடகப் பிரிவு சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சர்வதேசப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள மாணவி தவிசாலினியை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் நேரில் அழைத்துத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.










