எகிப்திலிருந்து லண்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஈஸிஜெட் விமானம் திடீரென திசை மாற்றப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தாலியத் தலைநகர் ரோமில் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்த பயணியொருவர் லக்கேஜ்ஜில் இருந்த தமது பவர் பேங்க் மூலம் தமது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாம் சார்ஜ் செய்ததையும் குறித்த பயணி ஒப்பு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடலோர நகரமான ஹுர்கடாவிலிருந்து லண்டன் லூட்டனுக்குச் சென்று கொண்டிருந்த இவ்விமானம் பயணத்தை ஆரம்பித்ததும், பயணியொருவர் லக்கேஜ்ஜில் இருந்த கையடக்க பவர்பேங்க் மூலம், கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்வதாக விமானப் பணியாளர்களிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பில் ஈஸி ஜெட் நிறுவனம் கூறுகையில், கையடக்க சார்ஜரில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பாதுகாப்பு விதிமுறைகளின் படி விமானம் தரையிறக்கப்பட்டது என்றுள்ளது.





